தள்ளாடும் வயதில்...!
காலத்தை கையாண்டால் காலமே பொன்னாம்!
காலத்தை தொலைத்தால் காலமோ கடனாம்!
காலமிது நமக்கெனவே காலத்தை போற்றிடின்
காலமே நம்மை கைதூக்கியே போற்றிடும்!
காந்தியின் இடையுடன் காலமும் நடந்தது!
கால்களுடன் காலத்திற்குப் போட்டியும் இருந்தது!
கருமமே கண்ணெனக் காலத்தினை மதித்தார்!
கருத்தினில் நிலைத்திடும் காலமாகி நி(வெ)ன்றார்!
எவ்வினை உலகில் எதிர்வரும் நிலையிலும்
அவ்வினை முடித்திட அவசியம் காலமே!
காரியம் யாவுமே காலத்தின் கைகளில்!
காலத்தோடு செய்திடில் வாகையோ நம்மில்!
ஓயாது உழைப்புடன் ஓடிடும் கடிகாரம்!
தேயாத நிலவாய் உயரத்தில் நின்றிடும்!
கவனிக்கும் வகையில் கடிகாரத்தின் இடம்!
அவனிக்குச் சொல்லும் காலமும் உழைப்பும்!
- மாலதி இராமலிங்கம், புதுச்சேரி..
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.