உச்சரிக்கப்படாத உனது சொற்கள்
தாலாட்டில் தடங்கலின்றித்
தடம் மாறாத் தமிழ்பாடும்
தாயே...... உதடுகளால்
உச்சரிக்கப்படாத உனது சொற்கள் தான்
தடம் மாறித் தடுமாறும் போதெல்லாம் என்னைத்
தலை நிமிர்த்தி வழிதிருத்தி நிலைநிறுத்தி உள்ளன.
போதிமர வானமாய்ப் போதனைகள்
புரியாமல் தந்தையே... ... உதடுகளால்
உச்சரிக்கப்படாத உனது சொற்கள் தான்
வெளியுலகின் அறிவுலகை
விழிகளுக்கு அறிமுகப்படுத்தி வழிகாணச் செய்தன.
பாதியிலே வந்தாலும் பரமசுகம் அளிக்கவந்த தாரமே
உதடுகளால் உச்சரிக்கப்படாத உனது சொற்கள் தான்
இந்தத் தறுதலைக்கு மகுடம் சூட்டி
தலைதாழா வாழ்வுக்குத்
தனிப் பொருளைத் தந்தன.
தோளோடு தோள் நின்று துணையாக வரும் நண்பா...
உச்சரிக்கப்படாத உனது சொற்கள் தான்
குணம் மாறிக் குறைசேரும்
கூடாரம் சேராமல்
மிகுதிக்கண் மேற்சென்றிடித்து
நட்பென்னும் நலவாழ்வு கொடுத்தன.
பேரிரைச்சலாய்ச் சுவைத்துச் சவைத்துக்
கடித்துக் குதறிப் போட்ட சொற்கள் தான்
செருக்கையும் சினத்தையும்
பகையையும் பிரிவையும்
பலவாறாய் வளர்த்தன.
நரைகூடிக் கிழப்பருவம் வாராமல்
நாம் வாழ அமுதமெனச் சாகா வரம் அளிப்பவை தான்
இறைவா...... உனது உதடுகளால்
உச்சரிக்கப்படாத சொற்களன்றோ...!
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.