அந்தவொரு நாளுக்காக…!

முள்தைத்த வலியையே
பெருவலியென
நினைத்து தவித்திருந்த நான்
ஆர்வத்தோடு ஆர்ப்பரிக்கிறேன்
அந்தவொரு நாளுக்காக…!
நித்திரையே சுகமென்று
கணப்பொழுதும்
கனவினிலே களித்திருந்த நான்
ஆர்வத்தோடு ஆர்ப்பரிக்கிறேன்
அந்தவொரு நாளுக்காக…!
கொப்புளங்களைக் கிள்ளிக்கீறி
சீழெடுக்கத் துணிவின்றி
வலிதாங்கிய நான்
ஆர்வத்தோடு ஆர்ப்பரிக்கிறேன்
அந்தவொரு நாளுக்காக…!
அன்னத்தை இலையிலிட்டு
அறுசுவை உணவுண்டு
ருசித்திருந்த நான்
ஆர்வத்தோடு ஆர்ப்பரிக்கிறேன்
அந்தவொரு நாளுக்காக…!
சைக்கிள் சக்கரத்தில்
காலெலும்பு நொறுங்கியபோது
சாவதே மேலென்று நினைத்திருந்த நான்
ஆர்வத்தோடு ஆர்ப்பரிக்கிறேன்
அந்தவொரு நாளுக்காக…!
கோடை மழைத்துளியில்
இரசித்துக் குளியலிட்டுக்
குதூகலித்த நான்
ஆர்வத்தோடு ஆர்ப்பரிக்கிறேன்
அந்தவொரு நாளுக்காக…!
அதீத வலிகள் அதீத சுகங்கள்
இவைகள்தான்
பெரிதென்றிருந்த நான்
ஆர்வத்தோடு ஆர்ப்பரிக்கிறேன்
அந்தவொரு நாளுக்காக…!
பெற்ற வலிகலெல்லாம்
வலிகளே இல்லை
பெற்ற சுகங்களெல்லாம்
சுகங்களே இல்லையென்ற
வாழ்க்கைப் பாடத்தை
அழுகையோடும்…
ஆனந்தத்தோடும்…
கற்றுக்கொண்டிருக்கும் நான்
ஆர்வத்தோடு ஆர்ப்பரிக்கிறேன்
அந்தவொரு நாளுக்காக…!
நிறைமாதக் கர்ப்பிணியாய்
நித்தம் நித்தம் நான்
ஆர்வத்தோடு ஆர்ப்பரிக்கிறேன்
அந்தவொரு நாளில்
குழந்தையின் முகம் காண…!
- கவிஞர் கவிமதி, திருக்கோவிலூர்

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.