அகமும் புறமும்
நெடுநாள்
உணர்ச்சிகளைக்
கொட்டியே தீர்வதென்று
தீர்மானித்து
தவத்தைத்
தொடங்கினேன்!
தொடக்கத்திற்காகக்
காத்திருந்து காத்திருந்து
காலச்சுழலில்
கரையத் தொடங்கினேன்
என்னுள்!
நேரம் ஆனதே
தெரியாமல்
ஆழ்ந்திருந்த என்னை
ஏதோ ஒன்று
கலைத்தது
வெறுமையிலிருந்து!
உணர்வுகளுடன் போட்டியிட்டு
வெல்ல முடியாது
ஏங்கித் தவித்துக் கொண்டிருந்த
மனது
கண்களில்
கண்ணீராய் மாறித் துளிர்த்து
முத்துக்களாய் வழிந்து
வீழ்ந்து சிதறியது
வெள்ளைத் தாளில்!
கவிதையில்தான் எத்தனை
வளர்நிலைகள்
எழுதப்படாததாக…
பாதியில் தொடர ழுடியாததாக…
முடிக்க முடியாததாக…
படிக்கப்படாததாக…
நினைவிலிருத்த முடியாததாக…
புரியாததாக…
தேவையற்றதாக…
இன்னும் எத்தனையோச் சிக்கல்கள்
இதுபோல்!
கசங்கிய காகிதம்
போலானது
கவிஞனின் மனது
எழுதப்படாத கவிதைக்காக…
கவிதை போல்தான்
போலும்
மனித வாழ்வும், இருப்பும் கூட!
- கவிஞர் கவிமதி, திருக்கோவிலூர்

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.