தீர்மானம் வேண்டாம்...!
புத்தாண்டு பிறக்கும் போது
நம் மனதிலும் பிறக்குது பல
புதிய புதிய தீர்மானங்கள்
அத்தனையும் எடுக்கின்றோம்
அதன் ஆயுள் சில நாட்கள் தான்
மீண்டும் பழைய பாதைதான்.
எந்தத் தீர்மானமும் எடுக்க வேண்டாம்
எந்நாளும் செய்யும் செயலை
ஈடுபாட்டோடு நாமும் செய்வோம்
ஈடில்லா வெற்றி கிட்டும்
செய்யும் செயலில் கொஞ்சம்
கவனம் வைப்போம் கட்டாயம்.
கொஞ்சம் முந்தி எழுந்திருப்போம்
செய்யும் செயலை திட்டமிடுவோம்
உடனே அதைச் செய்திடுவோம்
முடிந்ததை முதலில் செய்வோம்
முடியாததைப் பகிர்ந்து செய்வோம்
அத்தனைக்கும் அடுத்தவரை நோக்காதே.
அடுத்தவர்க்காய் வாழ வேண்டாம்
நமக்காக மட்டும் வாழ்ந்திடுவோம்
உள்ளதைக் கொண்டே நாமும்
மகிழ்ச்சியாய் வாழக் கற்போம்
வரும் ஆண்டு வளமாகும்
நம் வாழ்க்கை நிறைவாகும் நிச்சயமாய்.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.