தொலைந்த வாழ்க்கை
வீதியில்
பயணித்த மனிதர்கள்
உதிர்த்துச் சென்ற
பல வடிவ வார்த்தைகள்
சிதறிக் கிடக்கிறது
வீதியெங்கும்.
கால்களில் மிதிபடுவதும்
உடைந்து உதைபடுவதுமாக
சிதைந்து கிடக்கிறது
வார்த்தைகள்.
அவ்வழிப் பயணித்த
மனிதரையெல்லாம்
அவர் தத்தம் வார்த்தைகளை
எடுத்துச் செல்லும்படியாய்
ஒலிக்கிறது
ஓர் அசரீரி அறிவிப்பு.
உடையவர்களின் வார்த்தைகள்
அகப்படாமல் தொடர்பற்று
சில அழிந்தும் போயிருந்த
நிலையில்...
வார்த்தைகளைச் சேகரிக்கின்ற
அவஸ்தை மிகு போராட்டத்தில்
வெக்கைத் தணலில்
வெதும்பும் மனிதர்களின்
ஒட்டு மொத்த வாழ்க்கையும்
தொலைந்து கிடக்கிறது
அவ்வீதி முழுக்க...!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.