துன்பம் தீர்வது பெண்மையினாலே!

கருவொன்றில் முளைத்ததைக் கதிராகவே மடியேந்தி
திருமகவாய் உலகினிலே திக்கெலாம் திகழ்ந்திடவே
உருவாக்கத் தன்னுயிரை உதிரத்துடன் வெளித்தள்ளி
சருகனவே உடற்களைத்தும் சிரிப்பவள் தாயன்றோ?
சதைக்கூட்டில் இருட்டிலே சுழன்றும் இருந்தும்
உதைக்கும் சிசுவினாலே உள்ளூறவே மகிழ்ந்தும்
சிதைக்கும் அந்திமத்தில் செல்லும் நாள்வரையும்
பதைபதைத்தே காத்திடும் பாவையவள் தாயன்றோ?
சேயதனை வளர்த்திடவே சேயிழையாள் நாளும்
சாயாதே உழைத்திடுவாள் சக்கரத்தின் பிரதியன்றோ?
நோயென்றும் வாதையிலும் நோகாது தாங்கிடவே
மாய்ந்திடவும் தயங்காது மங்கையவள் தலைதானே?
தானருந்திட நீர்மட்டும் தனயனுக்கோ விருந்திட்டும்
நானுண்டு உனக்கென்றே நம்பிக்கையைத் தந்திடுவாள்!
யானிங்கே பெற்றதனால் யாய்தானே என்றிடுவாள்!
காணிங்கே எங்குருத்தென காசினிக்கே காட்டிடுவாள்!
ஏடெடுத்தே படித்திடவும் ஏற்றிடவே சிகரத்திலும்
பாடுபட்டு உழைத்தே பண்படுத்தும் மதியவளே!
சாடுவோர் ஒருவரையும் சகித்திடவும் மாட்டாள்!
பீடுடை வாழ்வாகப் பேரறிவாளனாக மாற்றுவாள்!
கண்ணின் மணியெனவே கரும்பின் இனிப்பெனவே
பெண்ணின் மடியிலிருந்து பெருவாழ்வு முடியுமட்டும்
என்புதோல் போர்த்தியவளின் எண்ணங்கள் எல்லாமும்
துன்பம் தீர்வதெலாம் தூயதானப் பெண்மையினாலே!
- மாலதி இராமலிங்கம், புதுச்சேரி..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.