இல்லற அழகியல்
இல்லறம் அழகியலாதல்
இணையரின் அணுகுமுறை
ஈவது
புரிதல் பிரிவுக்கு இடந்தரா
பகிர்தல் பண்பின் உச்சம்
இடைவெளி தகர்தல் நிச்சயம்
கருத்து முரண் இயற்கை
கலந்து பேசுதல் செயற்கை
ஒத்த முடிவாதல் இசைமை
அவரவர் ஈன்றவர்
அவரவர்க்கு உயர்வு
ஈன்றோரைக் காத்தலும்
மதித்தலும் பழகலும்
இருவர்க்கும் அழகு
தொழில்நுட்பம்
கோலோச்சும் காலம்
தொழிலே
சமூக வலைதளங்களில்
மூழ்கலாகாது
எழிலான வாழ்வில்
பேசலும் மகிழ்வதும்
அழகியலூட்டும்
குழலினிது யாழினிது
அதனினும் இனிதான மழலை
எதைக் கொண்டும் காரணமாக்கி
இடைவெளி பேணுதல்
தடையாகும் இல்லறத்துக்கு
தடையுடைத்து நேரம் ஒதுக்கலும்
மழலைகள் உடன் மகிழ்தலும்
மகோன்னதம் படைக்கும்
வாழ்வை வழிமறிப்பன
வறுமையும் வேலையின்மையும்
தாழ்வைத் தந்திடினும்
இணைந்து போராடுதல்
இல்லற அழகியல்
வரும் சோதனைகளைச்
சாதனைகளாக்கும்
சேர்ந்த முடிவும்
தேர்ந்த செயலாக்கமும்
சின்னஞ்சிறு இடையூறுகள்
சின்னஞ்சிறு இடைவெளிகள்
பல்கிப் பெருகாவண்ணம்
பழகித் தீர்த்தலில்
இல்லறம் அழகியலாகும்
வாழ்க்கை ஒருமுறை
கடந்து கொண்டிருக்கும்
காலம்
மீண்டும் கனியாது
யாண்டும் விட்டுக் கொடுத்தலும்
ஒருவருக்கொருவர்
கட்டிக் கரும்பாதலும்
இல்லற அழகியல்
தனது கணவன்
தனது மனைவி
தனது மக்கள்
இத்துடன்
குமுகாய மானுட நேயம்
இருவருக்கும் இருத்தலும்
மழலைகளுக்கு இயல்பாதலும்
இல்லற அழகியல்.
- பெரணமல்லூர் சேகரன்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.