விரிந்த நட்பு வட்டம்
பக்கத்துக் கடைக்கு
அடிக்கடி வரும் பையன்
நானெழுதுவதை
பார்த்துக் கொண்டிருப்பான்.
பக்கத்துக் கடை
வாலிபர்களுக்கு
பையன் உறவுக்காரன்.
அவர்களுக்கு
தேநீர் வாங்கி வருவது
வழக்கம் அவனுக்கு.
அவன் போகும் போது
தம்பி எனக்கொன்று
என்பேன்.
அவன் மனநிலையைப் பொருத்தே
நான்கில் ஒரு முறை
தேநீர் வருமெனக்கு.
மீதிச் சில்லரை
இரண்டு ரூபாயை
ஒரு நாள்
எடுத்துக்கொள்ளச் சொன்னது
முதல்
என் மேல் கரிசனம்
பிறந்திருக்கு அவனுக்கு.
இப்போதெல்லாம்
நான் சொல்லாமலே
தேநீர் வாங்கி வருகிறான்.
பத்து ரூபாயை
கொடுப்பதோடு சரி.
மீதிச் சில்லரையை
நான் கேட்காததிலும்
அவன் கொடுக்காததிலும்
எங்களுக்குள்ளான நட்பு
விரிந்து கொண்டிருக்கிறது.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.