இலாஞ்சனை
அழிபெயலிலும்
மூழ்காத
வனம் புகுந்து
தளிர் இலைகளின்
சலசலப்பில்
வாழப் பிடிக்கும் எனக்கு
சுள்ளிகளையும் விறகுகளையும்
அசைவற்ற சருகுகளையும்
அள்ளிச்சென்று
காலம் கழிக்கும் மூதாட்டி
அங்கே ஏற்கனவே
வாழ்ந்து கொண்டிருந்தாள்
அது போலவேச்
சிற்றோடையில்
சலவை செய்து
ஆடைகள் உலர்ந்ததும்
அவைகளைச் சுமக்கும்
கழுதைகளும்
காத்துக் கிடக்கும்
சிசுக்களுக்குப்
பாலூட்டி மார்தட்டி
வேங்கையில் தூளி கட்டி
தாலாட்டில் உறங்க வைக்கும்
அன்னையரும்
பாசி படிந்த கரை தாண்டி
சிறு வேட்டி முண்டு
துணியை நீரில் பரப்பி
மீன் பிடிக்க யத்தனிக்கும்
நீந்தத் தெரியாத சின்னஞ் சிறுசுகளும்
பார்வையற்ற எதிர்காலம்
குருட்டு வருங்காலம்
சிதைந்த பொற்காலம்....
எதற்கும் கிஞ்சித்தும்
கவலைப்படாத ஒப்பனையற்ற
இவர்களையும் மிஞ்சிய
மாங்குயில்களும்
மொட்டை வால் குருவிகளும்
வாலாட்டும் சிட்டுகளும்
தவிட்டுப் புறாக்களும்
வெள்ளை மைனாக்களும்
வீட்டுக் காக்கைகளும்
செம்போத்துகளும்
நீர்க் கோழிகளும்
இன்னும் இன்னும்...
இவைதான் அந்தக் குறுங்காட்டின்
மேதகு அடையாளங்கள்
- சந்திரா மனோகரன், செங்கோடம்பாலயம், ஈரோடு.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.