நெடிது!
பாலியம் -
சன்னஞ் சன்னமாய்
எரியுண்ட கொடும்பாவி போல்
சிதைந்து போனாலும்...
வாழ்வின் குரூர முகமும்
மாயங்கள் மலிந்த கொண்டாட்டமும்
வழமை போலவே
புற்கொடிபோல் வாடிப் போனாலும்...
அசையாச் சுடர் போன்ற
உன் மகரந்த நினைவுகளும்
கனல் கக்கும் தீக்கொழுந்துகள் போல்
சிதறடிக்கப்பட வேண்டுமா?
ஆழ்ந்து உறங்கும் சராசரம்!
இந்தப் புவிக்கு என்னாயிற்று...
இப்படிச் சிறுத்துக் கிடக்கிறதே!
இறப்பு -
இனிது என்றேன்.
சுருள் சுருளாய் உன்னையேச்
சில்வண்டு போல் சுற்றிச் சுற்றி வரும்
உரோகத்தின் உக்கிரம்
அணுவணுவாய் தின்று
உன் பேரழகைக்
கொடும் கழுகு போல்
கொத்திக் கிழிக்க வேண்டுமா?
விம்மும் உன் மௌனத்தின்
துலக்கம் ஒன்று போதும்
நெருப்புத் துண்டம் போன்ற
உன் துயரத்தின் கூப்பாடு
என் நாசியின் வழியில்
தடம் புரண்டு தவிக்கிறது !
இப்பொழுது நீ அசைவற்றவள் !
உன் மலை முகட்டு நெஞ்சின் மேலடுக்கில்
கருநாகம் போன்ற சடைப் பின்னலைக் காண்கிறேன்
ஆர்த்தெழும் பூமாலைகளுக்குள்
உன் உடலம் மூச்சு முட்டுவது தெரிகிறது
எங்கும் ஏகாந்தம்
மைதானம் போல் பரந்து கிடக்கிறது
நன்கு அறிவேன் -
சுவர்க்கத்தின் பொற்கதவு
இன்னும் மூடப்படவில்லை!
அதுவும் உனக்காகத்தான்!
அந்திப் பொழுதில்
கானகத்திலிருந்து நெடுகப் பிடிக்கும் காற்று
பரிவாரத்துடன் படுதா விரிக்கிறது!
மரண வாசனை!
அது யாருக்காகவோ....
ஆனால் -
என் காலமோ நீண்டது!
- சந்திரா மனோகரன், செங்கோடம்பாலயம், ஈரோடு.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.