வயிறு காய்கிறது
ஆரிரோ...ராரோ...
ஆராரிரோ...ராரோ..
வயிறும் காய்கிறது.
வாழ்க்கையும் போகிறது.
விடிவு தெரியாமல்
வேதனையும் கூடியது.
காம்பைக் கடித்து இழுக்க
கண்ணீராய் வடிகிறது.
கண்ணே... எனக்கு
கண்ணீராய் வடிகிறது (வயிறு)
வெறும் மார்பை முட்டுவது
வேதனையா ஆகியது.
பசிக்கு பாலுமில்ல.
உன் பசியடக்க
என்னாலும் முடியவில்ல.
வீதியிலே நாம் கிடக்க...
வாங்கி வந்த சாபம் என்ன...
என் கண்ணே...
நாம வாங்கி வந்த சாபம் என்ன... (வயிறு)
காசு பணம் இருக்கிறது.
வயிரு கஞ்சிக்குந்தான் அலைகிறது.
சாதி சனம் இருக்கிறது.
கண்ணே... சாமியும் வீதியில
வச்சுத்தானே
நம்ம பார்க்கிறது. (வயிறு)
அரசாங்கம் பார்க்கிறது.
அனாதையா பொணமும்
தான் விழுகிறது.
மயக்கமா வருகிறது.
மகனே நான் முழிக்கையிலே
உயிரோடு இருப்பியான்னு.
உள் மனந்தான் தவிக்கிறது.
கண்ணே..
என் உள் மனந்தான் தவிக்கிறது. (வயிறு)
ஆராரோ...ராரோ..
ஆரிராரோ...ராரோ..
- ரவி அல்லது, பட்டுக்கோட்டை.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.