பயணம் ரசிப்பதற்கென்றே..!
ஆஹா.. ரயில் ரயில்
கொண்டாடியது
இரு குழந்தைகள்
இரு குழந்தைகளின்
குடும்பத்தோடு
பயணப்பட்டேன் நானும்
ஜன்னல் இருக்கையைப்
பிடித்துக் கொண்ட இருவரும்
ஆறு மலை...
அருவி குகை...
சாரல் மழை...
மேகம் சூரியன்...
குளம் குட்டை...
குருவி கொக்கு...
டீ வடை...
வெள்ளரி வேர்கடலை...
பட்ஜி பக்கோடா...
பாலத்தின் சத்தம்...
இரவு வெளிச்சம்...
நிலா மச்சம்...
ஒன்றையும் விடுவதில்லை
கூச்சலிட்டு ரசித்து
வந்தனர்...
தூக்கத்தைத் தொலைத்து
சுகத்தை அனுபவித்து வந்தனர்...
பனிக் காலப் பொழிவில்
பாதம் ஊறிய ரயில்
ஓட்டம்
நடமாட்டம்
பிறகு
தவழ்ந்த போது
ஓட்டம் பிடித்தது
எங்களின் மனநிலை
ரன்னிங் ஸ்டேட்ஸில்
அடுத்த வண்டியைப்
பிடிப்பதற்கு
அந்தக் குழந்தைகள்
தவழும் ரயிலில்
ஓடிக் கொண்டிருந்தனர்
கண்களால்
பயணம் ரசிப்பதற்கென்றே..!
- ம. சேரன், வாலாந்தூர், மதுரை மாவட்டம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.