ஞாயிற்றுக்கிழமை
அவசரமாய் எழும்
காலைகளை
ஒரு அரைமணி நேரம்
அதிகமாகத்
தூங்க வைக்கிறது
அந்த ஞாயிற்றுக்கிழமை!
ஐயோ..! பள்ளிக் கூடமா..?
விழிப்புத்தட்டியே
தூங்கியக் காலைகளை
எழுப்பி விடுகிறது
அரைமணி நேரத்திற்கு முன்
விளையாட
அந்த ஞாயிற்றுக்கிழமை!
ஒரு வாரமாய்
கடுகு டப்பாவில்
மிச்சம் பிடித்திருந்த
ஐநூறு ரூபாய்த்தாள்
சில்லறை மாற்றுகிறது
மீன் கடையில்
அந்த ஞாயிற்றுக்கிழமை!
தினசரி எட்டு மணிக்குள்
எடுத்த வச்ச சூடு இட்லி
ஆவி போய்
ஆறிப் போய்
எதிர்பார்த்திருக்கிறது
நடைப்பயிற்சி போன
கணவனுக்கு
அந்த ஞாயிற்றுக்கிழமை!
பள்ளிச் சீருடைகள்
பணிச் சீருடைகள்
துவைத்து காய்ந்து
கொண்டிருக்கும் கொடி
சுமக்கிறது
ஒரு வாரச் சுமையை
அந்த ஞாயிற்றுக்கிழமை!
வீடு வாசல்
கழுவித் துடைத்து
பல் துலக்க
அவளுக்கான காலையை
மதியம் தந்தது
அந்த ஞாயிற்றுக்கிழமை!
மாலை
படத்துக்கோ
பூங்காவுக்கோ
போகலாம்
என்ற போது
அவள் கேட்கிறாள்..
விடுமுறையாக
ஒரு ஞாயிற்றுக்கிழமை!
- ம. சேரன், வாலாந்தூர், மதுரை மாவட்டம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.