கூர்மை
தேவதாரு விருட்சத்தின் ஆழ்தனிமையில்
இழந்த ஆன்மாவைத் தேடுபவன்
மெலிந்து தேய்ந்து சொற்களற்ற அவளை
சொட்டச் சொட்ட நனைக்கிறது பனிநீர்
பழகிப்போன என் புலம்பல்களிலிருந்து வடியும்
பூஞ்சணம் பூத்த வேட்கைகளின் மிச்சங்கள் !
தாரகைகளைச் சிதறடிக்கும் இசைத்துளிகளில்
இழந்தவளைத் தேடியலையும் பனி இரவு
எந்த முழக்கமோ களியாட்டமோ இல்லை
நிலா சிந்தும் ஒளியில் கந்தக நெடியா ?
விலக்கப்பட்டவனின் மனம் ஒளிர்தலின் ஒதுக்கிடமா ?
புதுப்பெயலில் தடம் பூரா அப்பியிருக்கும் ஈரப்பசை
உடையாமல் கொப்பளிக்கும் நீர்க்குமிழிக்குள்
அகன்றவளின் நினைப்புகளின் சேமிப்பு
கொண்டை வானம்பாடியின் கூப்பிடு தொனி
இறகுகளால் வனையப்பட்ட அவள் கூடு
ஒய்யாரமாய் இடம் பெயரும் பனிப் பறவை
கும்பிருட்டில் தப்பியவளுக்கு ஏது தாயகம் ?
மூச்சு முட்டி மணல் துகளென நொறுங்குகிறது
பொருளற்ற இரகசிய உரையாடல் !
ஒற்றைக் காலை எடுத்து மெதுமெதுவாய்
நாட்டியம் புரியும் மரணத்தின் கூர் !
- சந்திரா மனோகரன், செங்கோடம்பாலயம், ஈரோடு.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.