துலக்கம்
காற்றைக் கூறு போடும்
குடைக்குள் விரியும் சிறகென
ஒரு முடிவற்ற பயணம் தொடருகிறது
ஏகாந்தப் பூவின் வீச்சு நடை !
ஊரும் வெறியும் அவளை
கொடும் மழையெனத் துரத்துகிறது
வெப்பமும் சூதும் அகோரமும்
என்று தணியும் இந்த
இளமையின் மல்லாட்டத்தில்...
பற்பல கனவுகளையும் தகர்த்து
அடியொத்த காலத்தில்
ஒற்றைப் பூவின் இளங்குருத்தைக்
கசக்கி, உடைத்து, எரித்து
மிதித்து, காம்பை நறுக்கி
கொத்தித் துப்பும் ஒரு சமூகம்!
நிந்தையின் அடர்த்தியில்
அதன் சிவந்த விழிகளில்
ஓட்டையுடைசல் போல்
ஈட்டி முனையில் சொருகப்பட்ட
மெலிந்த மலரின் மிச்சம்!
அந்தத் திமிறும் குடை
ஓர் ஒற்கிடமாய்...
ஆபத்சகாயனாய்...
இருள் பிளவுண்டு வீழ்கிறது
ரீங்கரிக்கும் பறவை போல
ஒளிரும் கணங்களில்
வெளிறிய அந்தப் பூக்காம்பு
பளிங்குச் சிலையெனத் துலங்குகிறது!
- சந்திரா மனோகரன், செங்கோடம்பாலயம், ஈரோடு.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.