பக்குவம்
மனக் கிடங்கினை
திறந்து பார்க்கும்
கள்ளச்சாவி யாரிடமிருக்கு.
பெண் மனது ஆழமென்று
மொழிபெயர்த்தவன்
ஆதியிலே
மாண்டு போனதை
இன்னும் நீ
அறிந்திருக்கவில்லையா?
வார்த்தைகளின்
வர்ணஜாலங்களில்
மறைந்து கொள்ள
இருளப்பிய பிரகாரங்கள்
போதுமானதாய்
இருந்திருக்கலாம்.
ஒரு நாய்க்குட்டியையோ
ஒரு பூனையையோ
மடியிலமர்த்தி
தடவி விடும் நேர்த்தியைப்
பழகக் கற்றுக் கொள்ளாமல்
எதுவும் உன் மடிதங்காது.
கோப்பையில்
நிரப்ப நிரப்ப காலியாகும் மது
சிறுமூளையை
கணிசமான மயக்கத்தில் தள்ளி
உன்னை
ஆட்டுவிப்பது போல்
அன்பில்
மண்டியிட்டுத் தலைபட
சிலகாலம்
தேவைப்படும்தான்.
அன்பைப் பாவனையின்றி
போதிக்க
மதங்கள் மல்லுக்கட்டும் போதிலும்
குரோதம்
வஞ்சனை
சூன்யம்
பேராசைப் பிடியிலிருந்து
விலகிக் கொள்ள
நாள் பார்த்திருப்பது
வீணென்று சொன்னால்
அதை எல்லோரும்
ஏற்கத்தான் வேண்டும்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.