கவிதை ஒன்றி!
என் மனப் பீடிகையில் மலர் தூவி
அவனை அமரச் செய்து
பாமாலை பாடிப் போற்றியவள்
இப்பொழுது பளபளக்கும் வாளெனச் சீருகிறேன்
மலர் கொத்து போன்ற அதரங்களில்
எரிகனலைப் பெய்து விட்டு
உன் தவனம் தீர்த்துக் கொண்ட புரட்டன் நீ!
பெருக்கு போல் சீறி வெகுண்டவள் மேல்
மாமலை போன்ற உன் கால் சுவடுகளால்
சலனமற்ற வன்முறையைப் பதிவு செய்தாயே...
மனமறிந்து சுகம் அறியாத பேதை நான்
புயலேறு போன்றது உன் கேளிக்கை
கண்ணீரும் காயமும் வலியும் துரோகமும்...
ஒப்பனையற்ற முதுநீருக்குள் துவண்டாலும்
கலங்கிய அலைகளுக்குள் புரண்டாலும்
அமுங்கிய என் உடலில் பரிமளம் வீசுமா?
என் வெறுமையிலும் பொறுமையிலும்
உன் ஆடம்பரம் பகட்டு பெருமை எல்லாம் வீண்
பெருங்குழியோரம் கேட்பாரற்று கிடக்கும்
முகம் கறுத்து சிதிலமடைந்த சிலை
என் முரண்டல்களில் என்னைக் கழுவி கழுவி
உருட்டும் உன்னை உலகம் அறியுமா?
என் பிராணன் இனி எனக்கு வேண்டாம்
என் பூர்வீக வீட்டிலிருந்து ஒற்றையாய் வருவேன்
என் வேதனை கலந்த சுவாசத்தில் துயின்று கிடப்பேன்
முடிந்து போன என் வாழ்வெனும் தடத்தில்
உன் முரட்டடியோ முரசமாய் ஒலிக்கிறது
அதிரட்டும் பிரபஞ்சம் அழியும் வரை
கருகிய காதல் நிலைக்கும் வரை!
- சந்திரா மனோகரன், செங்கோடம்பாலயம், ஈரோடு.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.