முதல் நிகழ்வு
நீரில் அமிழ்ந்தும்
சாம்பல் படிந்தும்
மண்மேட்டில் புதைந்தும்
காற்றில் தொலைந்ததுமாய்.
காலம் தன்னுள்
இழுத்து வைத்திருக்கும்
கதைகள் ஏராளம்.
கோபமாய் மலரைத்
தீண்டிவந்த காற்றிலும் வீசும்
நறுமண வாசம்.
யுகங்களாய்ப் புகைந்தது
ஒருநாள் எரிந்து
சாம்பல் பூக்கும்.
வான்மழையே ஆனாலும்
தேவைக்கு அதிகமானால் அது
அழிவை உண்டுபண்ணும்.
மௌனங்களால் பேசிய
காலம் போய்
இரைச்சலில் இரைஞ்சுகிறது
உலகம்.
பால்யத்தில் விரித்த இலை
கல்வெட்டாய் நினைவுச் சுவடுகளில்.
கடைசி மனிதனின்
இறுதி யாத்திரையின் கதையை
எப்போதும் போல்
தன்னுள் தேக்கி
வைத்துக் கொள்ளும்
காலம்.
பின்வரும்
ஆதிகாலத்திற்கு அன்றது
முதல் நிகழ்வு...!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.