விதி மீறலின் விநோதம்!
சுருக்குப் பையில்
நாணயங்களும்
குறை மதிப்பு
பணங்களும்
கருணையில்
நிறைந்திருந்தது
ஏதோவொரு
காரணத்தின்
பொருட்டு
இரயிலிலிருந்த
யாவரிடமிருந்தும்
மத்திமப் பெண்ணின்
இடைவிடாத மன்றாடலில்.
ஒதுங்கியமர்ந்து
ஒவ்வொன்றாக
எண்ணிய போது
விட்டேத்தியான
வெறுப்புடன்
சேலை தூக்கி
தொடையில்
பிதுக்கிய சலம்
சங்கடத்தைக் கொடுத்தது
யாருமில்லையென
நினைத்தவரின்
தவிர்க்க முடியாத
தருணப் பார்வையில்.
பெட்டி மாறி
ஏறியதாக
பிடுங்கிக் கொண்ட
காவலதிகாரியிடம்
கண்ணீரின் கதறல்
எதுவும்
எடுபடவில்லை
கன்னத்தில்
அறையெல்லாம்
வாங்கினாலும்.
கைபேசியிலும்
கதையாடல்களிலும்
கவனமாக இருந்த
பயணிகளிடம்
யாரெனக் கண்டு
எப்படிச் சொல்வது
கையளித்த உதவி
அவருக்கு
காவந்தாகவில்லையென
உதவிய
ஒவ்வொரு
உபகாரிகளிடம்.
கையிலிருந்த
பணத்தைக் கொடுத்த போது
காலில் விழுந்ததை
தடுத்தாலும்
கண்ணீர் விட்டதை
காணச் சகிக்க முடியவில்லை
சீல் வாடை
சிந்தையில்
வியாபித்ததால்...!
- ரவி அல்லது, பட்டுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.