காத்திருக்கும் வாகனங்கள்
பிஞ்சு மேனி
பிய்ந்துவிடுமோவென
நெஞ்சு குலைகையில்தான்
அவர்கள்
நரம்பெடுத்துவிட்ட
நற்காரியத்தை
முடித்தார்கள்.
அழுதழுது
துவண்டு
துணியாகச்
சுருண்ட பொழுது
ஆற்றாமையில்
அழ முடியாது
தவித்தபோதுதான்
துணைக்குதவாத
தந்தையென
தூரமாக துரத்தினார்கள்.
இரவை விழுங்கி
நடந்து நடந்து
சோர்கையில்தான்
தலைச்சுமைகள்
யாவும்
தானாக இறங்க
சிரித்துறங்குவதாக
செய்திகள் சொன்னார்கள்.
முதுகேறி
ஓட்டும்
வாகனமொன்றின்
முரண்டுகள் பிடிக்கும்
ஒத்திகையை
முயன்று பார்க்கின்ற பொழுதுகள்
யாவிலும்
உனக்காக
ஏங்குவதை
இங்கு
எவர்தான்
அறிவார்கள்.
- ரவி அல்லது, பட்டுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.