நியாயம்
என் நீதிமன்றத்தில் நின்று
நீ பார்க்க
வேண்டுமென்பதே
என்னாசை
அப்படிப் பார்ப்பாயானால்
என் நிலைதனை
அறியக்கூடும்
என்னைத் திரும்பத் திரும்ப
குறி வைத்துப் பார்க்கும்
உன் பார்வைக்காக
சாதகமான
தீர்ப்பெழுதப் போவதில்லை
தர்மத்தின் கோல்பிடித்து
விலகாமல் நகரும்
என்னிடம்
ஆண் பெண்ணென்ற
பேதமைக்கு இடமில்லை
உள்ளூர்க் கடவுளின்
பட்டியலில் என்னைச் சேர்த்து
விடுவாய்
என்ற பயமும் பேரதிர்ச்சியும்
என்னிடம்
இல்லாமலில்லை
அடர்மழைக்கு
முந்தையப் பொழுதில்
காற்றில்
ஈரம் பரவுவதைப் போல்...
பார்வையால்
கருணை வழிந்து
அணைத்த போதிலும்
தப்பிப்பதும்
தப்பித்துக் கொள்ளாதிருக்காப்
போவதும்
அவள் விழி காட்டி
வழி நடத்தும்
என் நீதிதேவதைக்கே
வெளிச்சம்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.