தமிழே வாழ்க!

முச்சங்கம் வளர்த்த முத்தமிழே – என்
மூச்சினில் கலந்த முதுமொழியே...!
முக்காலம் கடந்த முதல் மொழியே
மூவுலகமும் முழங்கும் மூத்த மொழியே...!
தாய் கற்றுத் தந்த தாய் மொழியே
தரணியாளும் தனி மொழியே...!
சான்றோர் வளர்த்த சங்கத் தமிழே
சரித்திரம் பேசும் வரலாற்று மொழியே...!
என்றும் இளமை ததும்பும் கன்னித்தமிழே
எனை ஆட்கொண்ட இன்பத்தமிழே...!
தேனிலும் இனிய தீஞ்சுவை மொழியே
பார்போற்றும் பழந்தமிழ் நீயே...!
ஆதி மனிதன் பேசிய மொழியே
ஆலம் விழுதாய் வேரூன்றினாய் நீயே...!
பிறவி எடுத்தேன் உன்னை பாடவே
பெருமிதம் கொள்ளும் தமிழச்சி நானே...!
முதல் வந்தனம் உனக்கு
முதல் வணக்கம் உனக்கு...!
தமிழே நீயே என் ஆருயிர்
தமிழே நீயே என் பேருயிர்...!
உன்னுள் என்னைத் தொலைத்து
என்னை உன்னுள் தேடுகிறேன்...!
எழுதி எழுதி தீரவில்லை
படித்து படித்து அடங்கவில்லை...!
தினமும் வாசிக்கிறேன் உன்னை
நித்தமும் அறிகிறேன் என்னை...!
கவிதைக் கடலில் மூழ்கினாலும்
உன்னில் கொண்ட மோகம் குறையவில்லை...!
முத்தமிழ் நீயென்று அறிந்து
முக்கனியின் சுவையில் திழைக்கிறேன்...!
மண்ணும் விண்ணும் இருக்கும் வரை
என்றும் நீளும் உன் புகழ்...!
முதல் வந்தனம் உனக்கு
முதல் வணக்கம் உனக்கு...!
- இரா. வேதகனி, அம்பத்தூர், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.