எதுவும் சுலபமில்லை...!
சுலபமாய்
ஒரு கேள்விக்குள்
நுழைந்து கொண்டு
மறுபடியும்
என்னைப் பதிலுக்குள்
திணிக்கப் பார்க்கிறாய்.
கரை புரண்டோடும்
காட்டாற்று வெள்ளத்தை
மடைபோட்டுத் தடுப்பது
அவ்வளவு
சுலபமில்லை.
கிணற்றுநீரை
அள்ளி உற்றிய பிறகும்
அடிசுரக்கும்
ஊற்றுநீரில் தலைகாட்டும்
நிலா.
சூடுசுமந்த மூங்கிலை
ராகம் தெரியாதவன்
வாசிக்க
யாதொரு பயனுமில்லை.
நின்று கொண்டிருப்பவனுக்கு
தெரியாது
அமர்ந்து கொண்டிருப்பவனின்
அவஸ்தை.
முள்ளைக்
குத்திக் கொண்டவன்
முள்ளை வசைபாடுவது
எவ்விதத்தில் நியாயம்.
பதிலைத் தேடிப் பிடித்து
கேள்வி கேட்கப் பழகு
அவ்வமயம்
சரியான பதில்
கிடைக்கப் பெறும்
உனக்கு.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.