நம்மிடையே...!
நம்மை மிருகமாக்கும்
சாதி மதத்தை
மண்டையில் ஏற்றாதே
கல், உருவமில்லாதது,
ஒளி, சிலுவை என
நீ நம்பிக்கை வைக்கும்
எல்லாம் கடவுள்தான்
உனக்குப் பிடித்த படி வாழ
உரிமை உண்டு
ஆனால், ஒரு போதும்
உன் விருப்பத்தை
அடுத்தவன் மீது திணிக்காதே
உன் சுதந்திரம்
அடுத்தவரின் மூக்கின்
நுனிவரைதான்
என்பதைப் புரிந்து கொள்
தொண்டையில் கீழ்
இறங்கும் உணவு
கழிவு தான்
அற்ப வாழ்க்கையை
அல்பமாய் பெற்று விட்டு
நாம் ஆண்ட கதைகள்
பேசியது போதும்
நீ, நான், அவன் என
எல்லோரும்
தாயிடமிருந்து
வந்தவர்கள் தான்
நாம் எல்லோரும்
சமம் தான்
இருக்கும் காலம் வரை
அன்பில் கூடி வாழ்வோம்
எளியோர், வலியோர் என
எவர் வந்தாலும்
தண்ணீர் கொடுத்த
தமிழ்ச் சமூகம் நாமடா
தெருவில் திரியும்
நாடோடிகளுக்குக் கூட
இளைப்பாற
திண்ணைகள் அமைத்த
தமிழ்க்குடிகள் நாம்
இப்போது வடிந்து வீசுகிறது
நம்மிடையே...
மனிதக் குருதி வாசம்.
- நௌஷாத்கான். லி, சோழபுரம், கும்பகோணம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.