பேசும் பிணம்
இறுக்கமாய்ப் புதைத்து
வைத்திருக்கிறார்கள்
என்னை.
துளிக்காற்று கூட
உட்புகாமல்
சிரமப்படுகிறேன்
யாராவது
தெரிகிறார்களா?
எட்டிப் பார்க்கிறேன்.
ஒருவரும்
தென்படவில்லை.
என்னைச் சுற்றிலும் மண்
இருண்டு கிடக்கிறது.
என் முகப்பகுதியில்
சில்லென்று
பரவும் திரவத்தில்
பால்வாடை வருகிறது.
என் திணறலுக்கது
போதுமானதாய் இருக்கிறது.
பதினோறாம் நாளோ
பதிமூன்றாம் நாளோ
மீண்டும் இதுபோல்
எனக்குக் கிடைக்கப் பெறலாம்.
அவர்கள்
பேசிக் கொண்டிருப்பது
என் செவிகளில்
சன்னமாய் ஒலிக்கிறது.
எழாதபடி
புதைத்திருக்கிறார்கள்
என்னை.
பிணமானது தெரியாமலே
மண்ணுக்குள்
படுத்திருக்கிறேன்
நானும்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.