நான் யார்?
கார்மேகச் சல்லடைக்குள்ளிருந்து பூமிக்கு இறங்கிய
அந்த ஒற்றைத்துளியில் நனைந்த கணத்தில்
நானும் அதுவானேன்.
இலையுதிர்க் காலத்தின் மரத்தில்
காற்றுக்காகக் காத்திருந்த – அந்தக்
கடைசி இலையின் ‘காலம்’
நான் என்பதறிந்தேன்.
ஆழ்ந்து உள்ளிழுத்து நுரையீரல் நிரம்பி
மெல்ல இப்பிரபஞ்சப் பரப்பில்
கலந்துவிடும் காற்றிடை வெளியில் -அந்தக்
காற்றாகவே மிதந்து பயணிக்கிறேன்
நான்.
இருத்தலியல் பேசும் இந்த நொடியிலும்
இக்கணத்தை மட்டும் அனுபவிக்கும் – ஆனந்த
லயத்தில் தாளமிடுகிறது,
எதிர்காலத்தை மறந்து என்னைத்
தொலைத்த நான்.
பூமி சுற்றி வரும் சூரியன் கூட
இப்பிரபஞ்சத்தின் இன்னொரு மூலையில்
விண்மீனாய் மினுமினுக்கும் என்றால்
என்னவாகவோ இருந்துவிட்டுப் போகட்டுமே
இந்த நான்...!
- முனைவர் விஸ்வலிங்கம் தேன்மொழி, சிங்கப்பூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.