உப்பு கரிக்கும் மழை!
ஆழி முகக்கும் ஆதவனின் அனல்
கரங்கள் விலக்கி – உன்
இதழில் படிந்திருக்கும் கவிதைப் படிமங்களை
வெம்மைப் படாமல் குளிர்வித்திருக்கிறேன்.
பொருக்கு மணல் குத்திக் கிழிக்கும்
குதிகாலில் வழிந்தோடும் குருதிகளை – என்
கண்ணீரால் கழுவி மருந்திட்டிருக்கிறேன்.
துடுப்பு வலிக்க வலிக்க கடத்தற்கரிதான – உன்
ஆழியை வற்றப்பண்ணி, என் தோள் சுமந்து
உன்னைக் கரை கடத்தியிருக்கிறேன்.
மழையில் நனையாமலும், வெயிலில் ஒழியாமலும்
உன் நிழலைப் பலமுறை காப்பாற்றி
உனக்குப் பரிசளித்திருக்கிறேன்.
உன் விழிக்கு ஊறு நேர்கையில் – நான்
கைவிளக்கு ஏந்தி, கவிதை வாசித்து
மானுடப் பரப்பின் மகத்துவத்தில் உன்னைக்
கருத்தரித்து, மௌனப் பெருவெளியில் பிரசவித்திருக்கிறேன்.
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்திற்கு
மிகாத ஒற்றெனக் கருதி – உன்
வாழ்க்கைப் பக்கத்திலிருந்து என்னை
துடைத்தெறிகையில்,
மழைநீரும் உவர்க்கின்றது.
- முனைவர் விஸ்வலிங்கம் தேன்மொழி, சிங்கப்பூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.