காலனின் கணக்கு
தளிர் முற்றி இலையாகி வாழ்ந்து
பழுத்துச் சருகாகிக் காய்ந்து
விழக் காத்திருப்பதைப் போல்
காத்திருக்கிறேன்.
வாலிபகக் குருதியை
அள்ளிக் குடித்ததின்
அடையாளமாய்த் தேகத்தில்
முதிர்ச்சியும் சரீரத்தில் சுருக்கங்களும்.
இசைமீட்டும் வீணையின் தளர்ந்த
தந்தி போல் உடலில் உயிர் ஊசல்.
பால்யத்திலிருந்து பாடைபல்லக்கில்
பவனி போகும் கணம் வரை
ஒருவழிப் பாதையாய்
குறுக்கிட்டுத் திரும்பும் ஞாபகங்கள்.
வேரறுத்த நிகழ்வுகளும்
நீரூற்றிய தடங்களும் விடையின்றி
கேள்வியாய் நினைவில் வந்து போகும்.
மகிழ்ச்சியும் மன்னிப்பும் கோர
உள்ளுக்குள் மன்றாடி
புழுங்கியழுது வெம்பித் தீர்த்தும்
காலனின் கணக்கிலிருந்து
எஞ்சுவதில்லை ஓருயிரும்...!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.