காதல் காவியம்
கொஞ்சி வந்தவன் எனக்காக என்றும்
கெஞ்சி வாழ்பவன் காதலி காதலி
என்று காதலால் கருவேல மரத்தையும்
சத்தமின்றி சாய்ப்பவன் அவன்
கல்லாகி இருந்த என் கருங்கல் மனத்தையும்
செங்கல்லாய் மாற்றி அச்செங்கல்லால்
காதல் கோட்டைக் கட்ட வைத்தவன்
வல்லவன் வன்மையுடையவன்
திண்மையன் தேக வசீகரமுடையவன்
ஆதவனாய் அவனிருக்க பதுமமாய் நானிருக்க
அவன் குடிசைக்குள் என் அடுக்கு
மாடிக் காற்று வீச இருமனங்களும்
ஒரு மனதாய் கலந்து விட
மாளிகையும் குடிசையும் எட்டா உயரத்தில்
செம்மாந்து நிற்க மாளிகை மனம்
அன்னாந்து பார்க்க காதலித்தது குற்றம்
குற்றத்திற்குத் தண்டனை பிரிவு என்று
தண்டிக்க காதலில் பிரிவுதானே
அதிக சுகம் என்று சுகமான சுமைகளைச்
சுமந்தவாறே என்றும் அவனின் அவளாக...
காத்திருப்பாக...!
- முனைவர் சாரதா சுப்பிரமணி, சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.