மழை
அடை மழை
வேலையில்லை
திரும்பி வந்தார்
அப்பா
பாத்திரம் முழுவதும்
பரப்பி வைத்தும்
பாதி வீடு நனைந்தன
கவலையுடன்
அம்மா
சோறாக்க பானையில்ல
கூறத் தயாராகும்
அக்கா
குளித்து வந்து
மாற்றுத் துணியில்லாமல்
மழையில் நனையும்
தங்கை
நனைந்தப்
புத்தக ஏடுகளை
பிரித்தெடுத்து
அடுப்புச் சூட்டில்
காய வைக்கும்
தம்பி
எதையும்
கண்டுக் கொள்ளாமல்
ஏதோ சிந்தனையில்
நோய்வாய்ப்பட்ட
அண்ணன்
இடியோடு
கூட்டணி நடத்தின
தாத்தாவின்
இருமல் சத்தம்
நான் பரிசு
கிடைக்கும் என
எழுதிக் கொண்டிருந்தேன்,
மழையை வர்ணித்து
கவிதைகளை...!
- இரா. மே. இராமமூர்த்தி, சீர்காழி

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.