வாழியத் தமிழ்நாடு!

தமிழ் மொழிக் காத்திட்ட தமிழ்நாடு
பாரதியை தந்திட்ட பாங்கான நாடு
வாழும் நியதியை வகுத்துக் கொடுத்த
வள்ளுவர் பிறந்திட்டத் தாய்த் திருநாடு
அறமும் பண்பும் அன்பும் நிறைநாடு
முந்திய வளத்தில் முதன்மை முத்தமிழே
முத்துக் கடலும் பவழக் கடலும்
அத்தனை ஆயிரம் அழகினைச் சேர்க்கும்
துள்ளித் குதிக்கும் துடிப்பான அருவிகளும்
அள்ளிப் பருகிட இனிமை தருமே
கொள்ளிடக் கரையும் குலவிடும் வயல்கலும்
கொள்ளை அழகான பொன்னிற வண்டும்
தென்றல் காற்றும் தேமதுர இசையும்
மன்றில் ஆடும் மாமதுரைத் தமிழும்
கொன்றை வேந்தனும் குறள்நெறி வாழ்வும்
தெண்ணீர் வயலும் செங்கால் நாரையும்
கொண்டது என் தமிழ் நாடே
கடையேழு வள்ளல்கள் கண்டதெம் நாடு
தடையிலா கம்பனின் தமிழ்கவி பாடு
படைபல கண்ட முவேந்தர் நாடு
நடமிடல் பாராய் நற்றமிழ் நாடு
சிற்பக் கோயில் சிந்தைக்கு விருந்து
சித்தர்கள் தந்தனர் செம்மையாய் மருந்து
கற்பனை கலைகளில் கனிதமிழ் அருந்து
கலைகளால் பேசினான் கல்லிலும் இருந்து
கல்லணை கட்டிய கரிகாலன் மாட்சி
காலத்தில் நின்று காத்திடும் காட்சி
சொல்லரும் தஞ்சையில் சோழரின் ஆட்சி
சூழ்கடல் வென்றது புலிக்கொடி நீட்சி
முச்சங்கம் வைத்த பாண்டிய மன்னர்கள்
முத்தான தமிழ் காத்து முத்திரை பதித்தனர்
இத்தனை வளங்களும் என் தமிழ்நாட்டிலே
அத்தனை பெருமையும் வாய்ந்த என் நாடு
வாழிய! வாழிய! வாழியவே!
- பெ. சித்ரா இளஞ்செழியன், திருச்சிராப்பள்ளி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.