பொய் மூட்டைகள்!
இவர்கள்
கட்டி வைத்த
பொய் மூட்டைகளை
என்ன செய்வது?
எரியூட்டினால்
சுற்றுச் சூழலைப்
பாதிப்புக்கு
உள்ளாக்கும்!
கடலில்
தூக்கி வீசினால்
அலை அடித்து
மீண்டும் கரை
ஒதுங்கிவிடும்!
இருட்டறையில் வைத்தால்
கரையான்கள் அரித்தோ
எலிகள் கடித்தோ
நச்சு வாயுக்கள்
வெளிப்படும்!
கல்லறையில்
வைத்து மூடினால்
பேய்களாய் மாறி
போவோர் வருவோரை
மிரளச் செய்யும்!
இப்படி
காலந்தோறும்
கட்டப்படும்
பொய் மூட்டைகளை
என்ன செய்வதென்று
தெரியாமல் - விழி
பிதுங்கி நிற்கும்
நீதி தேவதைகள்!
- முனைவர் கு. சிதம்பரம், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.