அறமே நீடூழி!
என்னிலும் விண்ணிலும்
யார் வேண்டுமானாலும்
உங்கள் அடையாளத்தை
நிலை நிறுத்தலாம்!
யார் வேண்டுமானாலும்
மாட மாளிகைகள்
கூட கோபுரங்கள்
நினைவுச் சின்னங்களையும்
எழுப்பிக் கொள்ளலாம்!
என்னில்
தோன்றிய அனைத்தும்
எனக்குள்ளே அடக்கம்!
யாரும் இங்கு
எதையும் நாட்ட முடியாது!
காடுகள் மலைகள்
அனைத்தும் யானே
எல்லா மண்ணும்
எனக்குள்ளே அடக்கம்!
எல்லா மண்ணும்
என் மண்ணே!
என்னை நான்
மீண்டும் மீண்டும்
புதுப்பித்துக் கொள்வேன்!
காலங்காலமாய்- இங்கு
நிலைத்திருப்பது யான்
மட்டுமே!
மானுடர்களே!
நீங்கள் இன்று - என்மீது
ஏய்த்து எழுப்பிய
உமது அடையாளங்கள்
அனைத்தும் - நாளை
புதைந்து போகும்
என்னுள்ளே!
மானுடமே...!
புதையுங்கள்
நிலையற்ற
அடையாளத்தை!
விதையுங்கள்
நிலையான
அறங்களை!
அவையாவும் வளர்ந்து
புத்தன் போல
வள்ளலார் போல
திருவள்ளுவர் போல
நீடூழி வாழும்!
- முனைவர் கு. சிதம்பரம், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.