அக்கா!
கருக்கல் நேரத்தில்
கதவைத் திறக்கும் சத்தம்
கண்ணைத் திறக்கும் முன்
கலைந்தது மொத்தமும்
அது அலாரம் அல்ல,
வறுமையின் அழைப்பு...!
உரசியவுடன் பற்றிக் கொள்ளும்
தீக்குச்சி போல் இருந்த
அவள் கேட்டதில்லை
பள்ளிக்கூட மணியோசையை...!
சிறு வயதில்
அவள் கேட்டதெல்லாம்
தீப்பெட்டித் தொழிற்சாலைப்
பேருந்து அழைப்பொலியையே...!
புத்தகக் கட்டுகளைச்
சுமக்க வேண்டிய கைகள்
தீப்பட்டிப் பொதிகளைச்
சுமந்தன...!
அடுக்கிய தீப்பெட்டியில்
தீக்குச்சிகள் தெரிந்தன
அவளின் மெல்விரல்களாக...!
சிறு விரல்களில்
பசை ஒட்டியிருந்ததது
பட்டினியின் வடிவமாக
ஒட்டாமல் போனது
அவளின் குழந்தைத்தனம்...!
ஓடி ஆடி
விளையாடுகிற
மாலைப்பொழுதில்
செத்த சவமாகக்
கிடந்தாள்
சோர்வின் எச்சமாக...!
“அக்கா நீ படிக்கலையா?”
என்று கேட்டேன்.
சிரித்தாள் அவள்!
அந்தச் சிரிப்பில்
பதிலாகத் தெரிந்தது
குடும்பத்தின் பெருஞ்சுமை...!
மழைக்குக் கூடப்
பள்ளிக்கூடம்
ஒதுங்காதவள்
படித்ததெல்லாம்
தீப்பெட்டித் தொழிற்கூடத்தின்
தொழில்முறையை மட்டுமே...!
வாரக்கடைசிச்
சம்பள நாளில்
கையில் கொஞ்சம் சில்லறைகளும்
பெரிய சோர்வும் மட்டுமே
அவளிடம் எஞ்சியிருந்தன...!
அத்தனையும் அத்துப்படி
அதுவே
வாழ்க்கைக்கு முதற்படியாய்
அமைந்தது...!
அவள் ஏற்றிய விளக்குக்கான
ஒவ்வொரு தீக்குச்சியும்
அவள் அணைத்த
கனவுகளின் எண்ணிக்கை...!
ஆனால்
அக்காவின் வாழ்க்கை
ஒரு கவிதை போல
நிறைந்திருந்தது
தம்பி தங்கைகளின்
புத்தகத்தில்...!
தீக்குச்சிகளின் ஒளியோ
கொஞ்ச நேரம்தான் - ஆனால்
அக்காவின் தியாகமோ
ஒளிரச் செய்தது
ஒரு தலைமுறையை....!
- முனைவர் நா. சுலோசனா, சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.