பட்டாசு
போன வருஷம்
ஆடி மாத மேக்காத்துக்கு
மருந்து உரசி
என் பெரியம்மை பெரியாத்தா
தாத்தன்
கரியோடு கரியானார்கள்...!
தீபாவளி
வேலை மும்மரத்துல
மணி மருந்து
நீர்த்துப்போனதில்
வீட்டுக்காரரும் சொந்த பந்தமும்
பட்டாசோடு பட்டாசாக
வெடித்துச் சிதறிப் போனார்கள்...!
பங்குனி மாசத்து
வெயில் உக்கிரத்துல
சரக்கு ஏத்துறப்ப
வெடிச்ச வெடியில
பக்கத்து வீட்டு
குடும்பம் மொத்தமும்
துண்டு துண்டாகிப் போனது...!
தீபாவளி முடிந்ததும்
இன்னும் பயர் ஆபீஸ் திறக்கலையே
எந்த ஆபீஸ் திறந்திருக்கும்னு
கால்நடையா
அலையோ அலைந்துத் திரிந்து
மகனைக் காண்ட்ராக்ட்
வேலைக்குச் சேர்த்தாள்
உறவுகளை இழந்த தாய்...!
நாட்டுக்காக
முந்தா நாள் போருக்கு
தன் தந்தையை
நேற்றைய போருக்கு
தன் கணவனை
இன்றைய போருக்கு
தன் ஒரே மகனை
அனுப்பிய தாயின்
மன அழுத்தம்தான்
நம் கந்தக பூமித் தாய்க்கும்...!
- முனைவர் நா. சுலோசனா, சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.