கடத்தப்படும் மேகங்கள்!
இளவேனில் காலத்தில்
வெள்ளை நிறத்தில் பூ பூத்து
பச்சை நிறத்தில் காய் காய்த்து
தங்க நிறத்தில் பழங்கள் தந்து
பறவைகளின் பசியாற்றும்
வேம்பின் கிளைகள்
பருவக்காலம் வந்த பின்பும்
பூ பூக்கவில்லை !
நெடு வானில் - காற்றால்
கடத்திச் செல்லப்படும்
மேகக் கூட்டங்களைப்
பார்த்தவாறே - காய்ந்த
மரக்கிளைகளில் அமர்ந்து
சபித்துக் கொண்டுருந்தன
பறவைகள் கோபத்தில்!
இங்கே விழ வேண்டிய
மேகக் கூட்டங்களை
வேறு எங்கோ கண் காணாத்
தேசத்திற்குக் கொண்டுச் சென்று
சேர்த்து விடுகின்றது - இந்தப்
பொல்லாதக் காற்று என்று!
- முனைவர் கு. சிதம்பரம், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.