கருப்பு ஆடுகளின் மேய்ச்சல்..!
ஐந்திணை நிலப்பரப்பில்
குறிஞ்சித் திணை- தனது
குன்றுகளை இழந்து
குன்றிப் போனதால்
பருவ மழை
தவறிப் போனது!
உயிரினச்
சுழற்சியைக் காத்த
முல்லைத் திணையின்
கற்பாறைகளையும்
மேய்ச்சல் நிலத்தையும்
சிந்தையற்றச் சுயநலக் கூட்டம்
சிதைத்ததால் - அது
பொழிவிழந்து போனது!
மருதத் திணையில்
பொன் விழைந்த
வயல்களுக்கு உயிர்த் தந்த
ஏரிகளையும் குளங்களையும்
மூடி முள்வேலி போட்டதாலும்
ஆறுகள் ஓடிய வழிப்பாதையில்
கனரக வாகனங்கள்
வலம் வருவதாலும்
நீரும் நிலமுமின்றி
வாழ்விழந்த மக்கள்
அலைக்குடியாய் - இன்று
அலைகின்ற அவலம்!
நெய்தல் திணையின்
உப்பு வயல்களும்
கருவாடுகள் காய்ந்த
மணல் மேடுகளும்
ஆக்கிரமிப்பாளர்களின்
பதுங்கும் இடமாகவும்
பிணங்கள் ஒதுங்கும்
மேடாகவும் போனது!
கடின உழைப்பால்
பண்படுத்தி வைத்த
பாலை நிலத்தையும்
விட்டு வைக்காமல்
வாரிச் சுருட்டிக் கொண்ட
கூடாரக் கூட்டங்கள் !
ஐந்திணை வளங்களில்
வெள்ளாடுகள் போல்
மேய்ந்து சுற்றித் திரியும்
கருப்பு ஆடுகளைக்
கொற்றவை தெய்வத்திடம்
கொண்டுப் போகாத வரை
நிலங்கள் பாழ்படுவதை
யாராலும் தடுத்தாட்கொள்ள
முடியவே முடியாது!
- முனைவர் கு. சிதம்பரம், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.