மேல் நோக்கு நாளில்..!
மண்ணுக்கு அடியில்
விளையும் பயிர்களைக்
கீழ் நோக்கு நாளிலும்
மண்ணுக்கு மேல்
விளையும் பயிர்களை
மேல் நோக்கு நாளிலும்
சமநோக்கு நாளில் இரண்டு
வகையான பயிர்களையும்
பயிரிடும் வழக்கத்தைக்
கொண்டிருந்தார் என் தந்தை !
அவர் நாட்காட்டியில்
மேல் நோக்கு, கீழ் நோக்கு
சம நோக்கு நாட்குறியீடுகளை
மட்டுமே பார்க்கத் தெரிந்து
வைத்திருந்தார்!
நெல் நாற்று விட
மேல் நோக்கு நாளைத்
தேர்ந்தெடுப்பார்!
வேர்கடலை விதைக்க
கீழ் நோக்கு நாளைத்
தேர்தெடுப்பார்!
மேல் நோக்கு நாள்
பார்த்து என்னைப்
பள்ளிக் கூடத்தில்
சேர்த்ததாகவும்
சொல்லுவார்!
நகர வாசியாக
மாறிவிட்ட - நான்
இராகு காலம்,குளிகை
நல்ல நேரம், எமகண்டம்
ஆகியவற்றையும் சேர்த்து
பார்ப்பதால் - கொஞ்சம்
கூடுதல் சுமையைச்
சுமக்கின்ற உணர்வு
எனக்குள்!
- முனைவர் கு. சிதம்பரம், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.