பாவ நிலா!
நிலவைப் பார்த்து
நீண்ட நாட்களாகி விட்டது!
மின் விளக்கு வெளிச்சத்தில்
மின் விசிறிக்கு அடியில்
குளிரூட்டி அறையில்
வானத்தைக்கூட பார்க்காத
பெருநகர வாழ்க்கையில்
நிலவை எப்படி காண்பது?!
கதவைத் திறந்தாலும்
எதிர் வீட்டுக் கதவுதான்
தெரிகிறது!
சாளரத்தைத் திறந்தாலும்
எதிர் வீட்டு சாளரந்தான் தெரிகிறது!
வீட்டிற்கு வெளியே
காலடி வைத்தால் - அதுவும்
மகிழுந்தாகத்தான் இருக்கிறது !
தென்றல் காற்றும்
தீண்டுவதில்லை
சூரியக் கதிர்களும்
உடம்பில் படுவதில்லை!
வெளிச்சத்தைக் காண்கிறாள்!
சூரியனைக் காண்பதில்லை!!
சூரியன் உதிக்கும் திசையையும்
மறையும் திசையையும்
நிலவின் குளுமையையும்
குழந்தைகளுக்குப் பாடமாகக்தான்
சொல்கின்றாள் - அவள்!
நிலவை எப்படிக் காட்டுவது
குழந்தைகளுக்கு ?
அவள் அம்மா - அன்று
அவளுக்கு ஊட்டிய
நிலாச்சோறு - இன்று
தன் குழந்தைகளுக்குக்
கிடைக்கவே இல்லை
என்ற ஏக்கத்தில் அவள் மட்டுமல்ல
பாவம் அந்த நிலவும்தான்!!
- முனைவர் கு. சிதம்பரம், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.