அ..தர்மம்..!
நீதி தேவதையின்
கைகளில்
சரிந்து போனது
தராசு...
கண்களில்
கழன்று போனது
கருப்புத் துணி...
வீதியில் தர்மம்
வீழ்ந்து கிடந்தது...
உயிர் ஊசலாடியது
ரத்தக் காயங்களில்
ஈக்கள் மொய்த்தன...
செயலிழந்தன கைகள்...
விறைத்துப் போயின கால்கள்...
வறண்டது நாக்கு...
வெளிறியது முகம்...
வாய்வழி சுவாசத்தின்
வரவும், செலவும்
குறைந்து குறைந்து,
பின்
நின்று போனது...
நிலை குத்தின கண்கள்...
வெப்பம் தணிந்து
சில்லிட்டது தேகம்...
எண்ணெய் தேய்த்துக்
குளிப்பாட்டியது
பித்தலாட்டம்...
புத்தாடை போர்த்தியது
அநீதி...
பச்சை ஓலையில்
பாடை கட்டியது
பொய்மை...
மலர் வளையம் வைத்தன
பாவமும், பழியும்...
பாடை சுமந்தன
லஞ்சம் வாங்கிய
பகைமையும், கயமையும்...
சங்கு ஊதியது பொறாமை...
சுடு காட்டில்
பிணம் இறக்கி
எரு அடுக்கி
நீர்ப் பானை சுமந்து
சிதைக்குக்
கொள்ளி வைத்தது
அதர்மம்...
தீயில் பஸ்பமானது
தர்மம்..!
- பாளை.சுசி.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.