இளைய சூரியனே எழுந்துவா ...!
இளைய சூரியனே
எழுந்துவா ...!
உன் விழிப்பில் உலகின்
இருள் துயர் தொலையட்டும் ...!!
உன் கல்வி
விசிறிக்கு அடியில்
விலைபோவதே ...
மதிப்பென்று இருந்து விடாதே...
ஆராய்ச்சி என்பது
ஆய்வு க்கூடங்களில் மட்டும்தான்
இருக்க வேண்டுமா ?
புதையலைத்தரும்
பூமியிலும்
விழியை வீசலாம் ...
தரிசை
விசைத்தறியாக்க
கைகள் தேவை ...
சுயதொழில்
சொர்க்கம் காணலாம் வா ...!
வேலை வாய்ப்பு
அலுவலகங்களுக்கு
வேலை இல்லாமல்
போகட்டும் ...
கல்வி என்பது
வாழ்க்கைக்கு என்பதை
வருங்காலம் உணரட்டும் வா ...!
இளைய சூரியனே
உன் அக்கினிப் பார்வையில்
சுயநலமிகளும்
அரசியல் கிருமிகளும்
சோம்பேறிகளும்
சுட்டு எரிக்கப்படட்டும் வா...!
சொந்தக்கரங்களால்
காயமாகிப்போன
புனித பாரத பூமியை
தியாக மனத்தில் கொண்டு
சீர் செய்வோம் வா .
இளயசூரியனே
எழுந்துவா !!
- கற்பகம் ரவி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.