கிராமத்துப் பக்கம்
முத்து மழை முத்தங்களால்
முற்றமெங்கும் சிவக்கின்றதே.
கிராமத்துப் பக்கம் வந்தால்
வயல் காற்றடித்து
அழைக்கின்றதே...
பச்சிலைகள் ஆடும் போதும்..
பறவையினம் வானத்திலே
பரவசமாய்ப் பறக்கும் போதும்.
பனித்துளிகள் செடியை விட்டு
பணிந்து விடை பெறும் போதும்...
அழகழகாய் ஆனந்தங்கள்
பூக்கும் இந்த மனத்தோப்பில்..!
பார்வையினால்
பூப்பறிக்க
பல கோடிப் பூக்களுண்டு.
சுவாசங்களால்
ஈர்த்துப் பார்க்க
சிறு தென்றல் காற்று உண்டு.
வரம்புகளால் பிரித்து வைத்த
வயல் வெளிகள் இங்கேயுண்டு.
வாழ்ந்து பார்க்க ஒரு வீடு
இங்கே மட்டும் தானுண்டு!
ஓடை சலசலக்க…
ஓர வெயில் தாலாட்ட…
காலையிளங் காற்றினிலே...
கானமலர் சேர்ந்தாட...
கிராமம் நகைக்குதம்மா
இயற்கை வளங்கொளிக்க!
- ஜுமானா ஜுனைட், இலங்கை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.