பால் நிலா காய்கிறது!
சில்லென்று வீசும்
சிறு தென்றல்...
சிதறிக் கிடக்கும்
சிறு சிறு கற்கள்...
அங்கும் இங்கும்
மணற் திட்டுகள்...
அதன் மேற்பரப்பில்
குத்துச் செடிகள்...
வெள்ளைப் பூவில்
அந்திப் பூச்சிகள்...
சில் வண்டின்
சீரான ஒற்றை ராகம்...
ஓரிரு மின்மினிகளின்
ஓடிப் பிடித்து விளையாட்டு...
சிறு நடை போடும்
சிற்றோடையில்
சள சள சத்தம்...
இரு தவளைகள்
இடை வெளி விட்டு
இடும்புக்குப் பாடும்
பாட்டுக்குப் பாட்டு...
விரிந்து பறந்து
விஸ்தாரமாய் கிடக்கும்
ஆகாயம்...
வான வீதியில்
அங்கொன்றும்
இங்கொன்றுமாய்
கருத்துப்போன
அழுக்கு மேகங்கள்
அதைத் தொடத் துடிக்கும்
சில வௌவால்கள்...
காற்றில்
அணைந்தும் எரிந்தும்
கண்ணடித்து
கள்ளக் காதல் புரியும்
நட்சத்திரங்கள்...
பகலவன்
கண்ணயர்வில்
பதுங்கி பதுங்கி
பவ்யமாய்
பவனி வரும்
பால் நிலா:
அது
வீணே காயுது..
தோல்வியுற்ற காதலனின்
மனம் போல!
- பாளை. சுசி
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.