அரிசிப் பொங்கலும் அறிவுப் பொங்கலும்!
பொங்கல் பானையிலே அரிசியிட்டு, நெய்யிட்டு
சக்கரையும் பயறும் அளந்தேயிட்டு
பொங்கிய பொங்கலும் சுவையே
மூளைப் பாத்திரத்தில் அறிவிட்டு, அணியிட்டு,
அலங்காரமிட்டு கற்பனை அளந்தேயிட்டு
பொங்கிவந்த கவிவரிகளும் சுவையே
பொங்கிய பொங்கல் படைத்த பாத்திரம் போல் - கவிப்
பொங்கல் படைத்த இணையமும் சிறப்பே
பொங்கலுண்டு சுவை இன்பம் பெற்று – மனப்
பந்தலிலே இன்பச் சுவையுண்டாற் போல் - கவிப்
பொங்கலுண்ட களிப்பினிலே கருத்தின்பம் பெற்று
அணிச்சுவையின்பம் கொள்வோம்.
ஓட்டைப் பானையிலிட்ட பொங்கல்
ஒட்டாது கொட்டும் - மன
ஓட்டப் பாத்திரத்திலிட்ட அறிவும்
ஒட்டாது கொட்டும்
அறிவதை மனப் பாத்திரத்திற்
தேக்கி வைப்போம் அதன் பயனை
அள்ள அள்ளக் குறையாது எடுத்தளிப்போம்
பானைப் பொங்கல் அளவானது
கொள்ளளவே கொட்டும்
அறிவுப் பாத்திரப் பொங்கல் மேலது - அது
கொட்டக் கொட்டக் குறையாதது.
- சந்திரகௌரி சிவபாலன், ஜெர்மனி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.