மறுமையில் ஏது…?
பலமுறை கண்களில் பட்டதனால்
நெஞ்சம்
“தீ”யென ஆகிப்பற்றியதே…
நல்லவர் என்னும் போர்வையினுள்ளே
தீயோர்
வாழ்வதை எண்ணிப் பாடுகிறேன்…
ஒரு முறைதான் இவ்வுலகென்று தெரிந்தும்
பாவிகள்
பல முறை பாவங்கள் செய்வது ஏனோ?
தொழுவது கூட சுமையென எண்ணி
வாழ்வதும் ஒரு சுகமா…?
தர்மத்திலேது சுகந்தமென்று
இரு கரங்களை மூடுதல் நியாயமா?
வறுமைக்குப் பயந்தாய்
தருமத்தை மறந்தாய்…
மறுமையில் ஏது பண்ணிடுவாய்…?,
மனிதா!
மார்க்கத்தை மறந்தாய்
கடமையைத் துறந்தாய்
சொர்க்கத்தை அடைதல்
இலகென நினைத்தாயோ?
சொகுசினில் மிதந்தாய்
கருணையைத் தொலைத்தாய்
கொடுமைகள் இழைத்தாய்…
மானுட மதிப்பென்ன அறியாயோ?
உண்மையை மறைத்தாய்
உயர் மார்க்கத்தை மறந்தாய்
இப்படியே (நீ) இறந்தால்
மறுமையில் ஏது பண்ணிடுவாய்…?
-ஜுமானா ஜுனைட், இலங்கை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.