அடை மழை!
தேவையில்லா நேரங்களில்
பெய்யும் சில நேர அடை மழை
தொடர்ச்சியாய்ச் சக்கரம் போல
சென்று கொண்டிருந்த அன்றாட
வாழ்க்கையை முழுவதுமாய்
சிதைத்து விட்டு இப்பொழுதோ
இன்னும் சிறிது நேரத்திலோ
நின்றுவிடுவதாய் ஏமாற்றி ஏமாற்றி
நின்றுவிடாமல் தொடர்ந்து கொண்டே
கோபத்தை மெல்லச் சீண்டி விட்டு
வீழ்ந்து கொண்டு இருக்கும்...
இந்த அவசர மழையை
நம்மை அறியாமல்
திட்டத் தொடங்கி இருப்போம்
அருகில் நம்மைப் போலவே
திட்டத் தயாராய் இருக்கும்
ஒருவரிடம்
சில நேரம்
நம் திட்டுகளைக் கேட்டு
நின்றும் போய் விடுகிறது
அவசரமாய்ப் பெய்த
அடை மழை.
-ராசை நேத்திரன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.