மீண்டும் அக்கினிக் குஞ்சாய்...!
அனலுக்கு சூட்டை அறிமுகப்படுத்திய கனலின் கரு…!
சுருண்டு கிடந்த தமிழரின் இருண்ட மூளைக்குள்
கவிதைச் சூரியனின் கதிர்களைச் செருகிய ஆதவத் துணுக்கு…!
இடியிடம் ஆவேசத்தையும் மின்னலிடம் ஆக்ரோஷத்தையும்
பண்டமாற்றுச் செய்து பாடல் புனைந்த எரிமலையின் முகடு…!
மொழியின் மென்மைக்குள் மூர்க்கமாய்ப் புதைந்து
திராவக வார்த்தைகளைத் தேடியெடுத்து…
சாட்டையடிக் கவிதைகளில் சீற்றத்தைக் காட்டி
சீமையனைச் சிலிர்க்க வைத்த சூறாவளியின் சூலாயுதம்….!
மன்னர்களைப் பாடி மடிப்பிச்சையேந்திய மரபினனல்ல…
புல்லர்களைச் சீண்டி
புழுத்தர்களைச் சாடி
வெள்ளையனைப் பொசுக்க
வெறி கொண்டெழுந்த வெந்தழல் வெக்கை….!
வேண்டுகோளொன்று வைக்கின்றேன்… பாரதீ…
லஞ்ச ஊழலின் லாகிரிப் புணர்ச்சியில்
பஞ்சப் பரிசலோட்டும் பாரதத்தைக் காக்க…
பணநாயகமாகிவிட்ட ஜனநாயகம் மாற…
அரிதாரம் பூசிய அரசியல் ஆந்தைகள் அழிய…
சுரண்டல் சூரபத்மர்கள் சுடுகாடு போக…
காவியுடைக் காமுகர்கள் கல்லறை புக….
கலாச்சார கலாபம் நிமிர…
பராம்பரியப் பட்டாடை ஜொலிக்க…
அவதரி…
மீண்டும்…
அக்கினிக் குஞ்சாய்…
- முகில் தினகரன், கோயம்புத்தூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.