துளிப்பாக்கள்
கற்பித்தவன் மாணவன்
கற்றுக் கொண்டவன் ஆசிரியன்
அனுபவம்..!
*****
செடிக்கு நீர் ஊற்றினேன்
அழுகி விட்டது
அளவு தெரியாத அன்பு..!
*****
காதலி
கண்ணில் கவிதை
கண்ணீர்த் துளி..!
*****
மழை பெய்த மறுநாள்
மலர்ந்தன காளான்கள்
பூமிக்கு குடை பிடிக்க..!
*****
உணவின்றி இறந்த நாய்
உள்ளூர் குளத்தில்
உப்பிய வயிற்றோடு..!
*****
பூமாதேவி மேல்
சாரல் செண்ட்
மண் வாசனை..!
*****
குடை விளிம்பில்
வியர்வைத் துளிகள்
சிறு மழை..!
*****
உலைப் பானை அடுப்பில் ஏற
கவயம் ஏறியது
பனை மர உச்சிக்கு..!
*****
துள்ளித் திரிந்த மீன்
துடி துடித்து மாண்டது
மீன் கொத்தி வாயில்..!
*****
கருப்புச் சாக்கடையில்
கற்பிழந்த கொய்யா-
அணில் கடித்தது..!
*****
நீ கவிதை
அதனால்
நான் கவிஞன்..!
*****
மதில் பூனையின்
மியாவ்’ ‘மியாவ்’ சத்தம்
தெருவில் மீன்காரன்..!
*****
அழைப்பு இல்லை
ஆனாலும் ஆஜரானேன்-
இறப்பு வீடு..!
*****
காதல் சுகமானது
கண் விழிக்காது
காணுங்கள் கனவு..!
*****
அகோரப் பசியும்
அடங்கிப் போகிறது
குழந்தையின் சிரிப்பில்..!
*****
பூச்சு காட்டினேன்
அவள் தலையில்
பூ சுற்றினாள்
என் காதில்..!
*****
பொங்கி வழிந்தது பால்
சுத்தமானது தரை
பூனை..!
*****
அவன் குடிக்கும் பாலில்
மிதக்கும் ஈ
நிறையப் போவது
நாய் வயிறு.!
*****
வாலறுந்த பட்டம்
வான வீதியில்..
தாறு மாறாய் மனம்..!
*****
தாழ்வாய் பறக்கும் தட்டான்
பிடித்து விடாதே..
மழை வரப்போகிறது..!
*****
ஆடையின்றி குளிப்பதால்
அழகாயிருக்கிறது...
கண்ணாடித் தொட்டிக்குள்
கறுப்பு மீன்..!
- பாளை.சுசி.
![](http://www.muthukamalam.com/images/logo.jpg)
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.