அதீதம்
அதிகாலையிலேயே
மழை ஆரம்பித்துவிட்டது
காலையில் செய்வதற்கு
ஒன்றுமில்லை
சாப்பிடுவதைத் தவிர
விடுவிடுவென ஓடிப்போய்
கதவைத் திறந்தேன்
நினைத்தது போல்
நடந்து விட்டது
நாளிதழ் மழைநீரில்
தொப்பலாக நனைந்துவிட்டது
புத்தக அலமாரியைத் திறந்தால்
சுவரெல்லாம் ஓதம்காத்துப் போய்
புத்தகத்தின் அட்டை
நமுத்துப் போயிருந்தது
கதவெல்லாம் அடைத்துவிட்டேன்
நொடிமுள் நகரும்
சத்தம் மட்டும் கேட்டது
நத்தை போல் நகர்ந்து
கொண்டிருந்தேன்
மரணத்தை நோக்கி
காத்திருத்தலே ஒரு
தவமல்லவா
மாத்திரை மருந்துகள்
எத்தனை நாள் கட்டுப்படுத்தும்
சித்ரவதையாகத் தான் இருக்கிறது
மருத்துவரைக் கேட்டால்
பயாலாஜிக்கல் வார் என்கிறார்
ஆண்டவன் பரீட்சித்துப் பார்க்கும்
சோதனை எலியாய்
என்னை பயன்படுத்தி விட்டான்
விதியே என்று
சகித்துக் கொள்கிறேன்
வேறென்ன சொல்ல…?
- ப. மதியழகன், மன்னார்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.